TAMIL CHALLENGED READERS.... CERTAINLY NOT FOR U :)
This is an article published by Tamil news daily DINAMANI on the VIOLIN ensemble conducted at THAYAGARAJA SANGEETHA VIDVATH SAMAJAM, MYLAPORE on 17 july 2010 by CARVA Rajasekar & Disciples.
25 வில்லாளர்கள்!
First Published : 25 Jul 2010 12:00:00 AM IST
மைலாப்பூரில் உள்ள தியாகராஜ வித்வத் சமாஜத்தில், இருபத்தி ஐந்து வயலின் வாத்தியக் கலைஞர்கள் வில்லை இழைக்க சேர்ந்திசையாக ஒலித்த நாதத்தைக் கேட்பது செவிக்குணவென்றால், அதைக் கண்ணாரக் காண்பதற்குக் கண் கோடி வேண்டும். இவர்களை உருவாக்கியதில் முழுப்பங்கு சி.ஏ. ராஜசேகருக்கே உரியது. "கார்வா' என்ற அமைப்பின் ஸ்தாபகரும், சங்கீத கலாநிதி எம். சந்திரசேகரனின் சீடருமான இவரிடம், நிகழ்ச்சிக்குப் பிறகு நாம் கேட்ட முதல் கேள்வி - "குழந்தைகளுக்கு வயலின் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும், "பல வயலினிசை' என்ற கோட்பாடும் உங்கள் மனதில் எப்படி உதித்தது?' என்பதுதான்.
இந்தக் கேள்விக்கு ராஜசேகர் அளித்த பதில்: ""கற்க வருபவர்களும் சரி, பெற்றோர்களும் சரி, பக்க வாத்தியமாக எப்பொழுது மேடையேறலாம் எனும் எதிர்பார்ப்புடன் தான் இருக்கிறார்கள். கச்சேரியில் வயலின் வித்வான், மெயின் கலைஞருடன் ஒத்துப் போய், பக்க வாத்தியமாக மட்டுமின்றி பக்கா வாத்தியமாகவும் இருக்கணும். இதற்கு சில வருடங்கள் ஆகும். முதலில் வந்து சேர்ந்தவுடன் உண்டாகும் ஆர்வத்தை வளர்ப்பது எப்படி? பொறுமையைக் கொண்டு வருவது எப்படி? இவ்வாறு எண்ண எண்ண, குழந்தைகளையும் மற்றவர்களையும் குழுக்களாக வாசிக்க வைக்கலாம்; இது அவர்களை ஊக்குவிக்கும் எனும் நம்பிக்கை பிறந்தது. கீதம் தெரிந்தவர்கள் ஒரு க்ரூப், வர்ணம் நிலையில் இருப்பவர்கள் ஒரு வட்டத்தில். இந்த விதத்தில் தான் கார்வா வளர்ந்தது என்று விளக்கமாக பதிலளிக்கிறார். இவரது பார்வையும் எளிய சித்தாந்தமும் நமக்குத் தெளிவாகிறது. நவம்பர் 12ஆம் தேதி 2000ஆம் ஆண்டு, அயோத்யா மண்டபத்தில் 57 வயலின்களுடன் கார்வாவின் முதல் நிகழ்ச்சி, எனது குருநாதரின் முன்னிலையில் நடந்தது. நல்ல வரவேற்பும் பாராட்டும் பெற்றது. நான் எடுத்த முதல் படி சரியானது தான் என்று அங்கீகாரம் அளிப்பது போலிருந்தது. இன்று 120 மாணவமாணவியர் "கார்வா'வில் பயின்று வருகிறார்கள். இவர்களில் எனது கணிப்பில் ஒரு பத்து பேராவது மிகச் சிறந்த வித்வான்களாகப் பரிமளிக்கப் போவது உறுதி. இந்தத் தேர்ந்தவர்களை என்னுடன் மேடையில் அமர்ந்து வாசிக்கப் பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறேன்.எங்களது பரம்பரை வயலினுடன் பல காலங்களாகவே பற்றுடன் இருந்திருக்கிறது. "சி.ஏ.' என்ற எனது இனிஷியலே எனது தகப்பனார் சித்தூர் அப்பன்னாவைக் குறிக்கும். இவர் ஒரு வயலின் வித்வான். எனது முதல் குரு இவர்தான். இவரது சகோதரர்களும் வயலின் கலைஞர்கள். எனது பாட்டனார் வேதாசல ஐயர் வயலின் மட்டுமின்றி, புல்லாங்குழலும் வாசிக்க வல்லவர். என் அளவில் இசைத் துறையில் இசைக் கலைமணி பட்டம் பெற்று, பின் சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து முதுநிலை பட்டமும் பெற்றுள்ளேன். இதிலும் இதற்கடுத்து தொடர்ந்து நான் மேற்கொண்ட எம்.ஃபில்., படிப்பிலும் தங்கப் பதக்கம் வாங்கியுள்ளேன். மேற்கத்திய இசையில் எனது குருநாதர் வி.எஸ் நரசிம்மன். இந்த முறையைக் கற்றதன் பயனாக எனக்கு வயலின் இசைப் பற்றி மேலும் பரவலாகவும் விசாலமாகவும் புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டாயிற்று. எம்.ஃபில்., ஆய்வுக்காக நான் எடுத்துக் கொண்ட தலைப்பு வயலினில் கற்றுக் கொடுக்கும் முறைகள் என்பதே. எனது ஆய்விற்கு வழிகாட்டியாக முனைவர் பிரமீளா குருமூர்த்தி அவர்கள் இருந்தார்கள். பல்கலைக் கழகத்தில் நேரடியாகக் கற்றதில், இசை போதிக்கும் வழிகளும் அதிலுள்ள நுணுக்கங்களும் என்னால் பார்த்தும், கேட்டும், அனுபவித்தும் தெரிந்துகொள்ள முடிந்தது.எங்கள் பள்ளியில் விடுமுறை என்பதே இல்லை. 24 X 7 என்ற ரீதியில் செயல் பட்டுக் கொண்டிருக்கும். தீபாவளியன்று பட்டாசு சத்தத்தில் வாசிக்க இயலாது என்ற காரணத்தாலும், ஆயுத பூஜையன்று வாத்திய வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்பதாலும், இந்த இரண்டு தினங்கள் மட்டும் விடுமுறைகள் போல அனுசரிக்கப்படும். எனது மனைவி மாலினி, எனது பெண் அபூர்வா, இருவரும் வயலின் வாசிக்கும் திறம் பெற்றவர்களாதலால், சில வகுப்புகளை அவர்கள் பார்த்துக் கொள்ளவும் முடிகிறது. வகுப்பு இடைவிடாமல் நடந்தேறவும் உதவுகிறது. சென்ற ஆறு வருடங்களாக மே மாதத்தில் திருவையாற்றில் தியாகராஜரின் சன்னதியில் நாங்கள் வாசித்து வருகிறோம். 2006 ஆம் ஆண்டு நாதாஹாரமாக ஒரு மாலை வடிவில் அவர்களை அமரவைத்து வாசித்தது அனைவருக்கும் ஒரு பக்திபூர்வமான அனுபவமாக அமைந்தது'' என்றார் ராஜசேகர். அவரிடமிருந்து நிறைவுடன் விடை பெற்றோம். ஆர்வலன்படம்: மணலி அருண்
Courtesy : Dinamani.com